டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

" alt="" aria-hidden="true" />

 

புதுடெல்லி:

 

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது.

 

வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 



இதில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சுகளும் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.


 

இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி உள்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இதையடுத்து, டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

 

இந்நிலையில், டெல்லியில் வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். வீடுகளை இழந்தோருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயம் அடைந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.